Poetry


நண்பர் விஜயநேத்ரன் அவர்கள் எழுதிய மகாபாரதம் கவிதைகள் 


கவிதை - 1




தானம் தினம் செய்திடவே 
தனம் எதுவும் தேவையில்லை - உன் 

மனம் இருந்தால் போதுமடா 

மார்க்கம் நூறு தோன்றுமடா..


கவிதை - 2




வனத்தில் வாழ்ந்து வந்தாலும்
வாழ்க்கை நெறியதனை தினமும்

வாரிசுக்கு போதித்தான் வாழ்வினிலே...

தர்ம நெறிகளோடு தன்னாற்றலையும்

தினமொன்றாய் போதித்தான் 

விழியற்ற மன்னன் மகன்களுக்கு
வழி காட்ட தவறிவிட்டான்
பிஞ்சு உள்ளங் கொண்ட மனதினிலே
நஞ்சை விதைத்து உரமிட்டான் 
நயவஞ்சகமாய் சகுனி யவனே.
கண் பார்வையற்றவன் வாரிசுகளை 
கலியின் வழியில் அழைத்து சென்றான்...

மாமுனிவன் சாபத்தை மனதில் மறந்து 
மாதுரி யவளிடம் மோகம் கொண்டான்
மறுநிமிடம் உயிரை விட்டான்
மையலினால் பாண்டு அவனோடு
தையள வளும் தன்னுயிர் துறந்தாள்.
குழந்தைகள் ஐவரின் வாழ்விற்காய்
குந்தி வந்தாள் தலைநகருக்கு
குருவம்ச மதன் நலனை எண்ணி...

கவிதை - 3




விஜயதாரி ! காண்டீபதாரி !!


அன்னை ஒருத்தியை சுமக்க வைத்தாய்
அவனியில் இருவராய் பிறக்க வைத்தாய்
அருகே அவர்களை இருக்க வைத்தாய்
அந்த உண்மையை மறைத்து வைத்தாய் 

வில்லில் இருவரை இணைத்து வைத்தாய்
வீரத்தால் அவருக்குள் பிணக்கு வைத்தாய்
பகையை நீயேன் வளர்த்து விட்டாய்
பாவம் அவர்களை தவிக்க விட்டாய்.

எதிரெதிர் அணியில் நிற்க வைத்தாய்
எதிரியாய் அவர்களை நினைக்க வைத்தாய்
எல்லைகள் அதனை உடைத்து எறிந்தாய்
எல்லாம் உன் செயலென உணர வைத்தாய்

தலைமகன் அவனிடம் உண்மை சொன்னாய்
தர்மத்தைதனக்குள்ளே உணரவும் வைத்தாய்
தனஞ்செயன் சரத்தால் உயிர் பறித்தாய்
தம்பி அவன் மனம் கலங்க வைத்தாய் 

கவிதை - 4




மான் தேகம் தான் கொண்ட
மகரிஷியைக் கொன்றதனால் 
மன்னனாகும் தகுதி யில்லையென 
அண்ணனவன் அரசனாக நாடாள 
அனுசனவன் அனுமதி வேண்டினான்
கங்கைமகன் பாதம் பணிந்து
கானக வாழ்வைத் தேடி....

அரச வாழ்வில் திளைத்த மன்னன்
அறநெறி தவறியதாய் எண்ணி
தவவாழ் வதனை வாழ்ந்திடவே
தன் இல்லாளோடு புறப்பட்டான்
தனியாகத் தான் சென்றானோ???
தர்மத்தையும் அழைத்து சென்றானோ???

தன்னிலை எண்ணி தனக்குள் துடித்தனுக்கு
தான் பெற்ற வரத்தின் பலனை
தலைவனிடம் எடுத்துரைத்தாள்.
மனைவியவள் சொன்ன சொல்லில்
மனம் மகிழ்ந்த மன்னனவன்
மழலையதை வேண்டி நின்றான் .
எந்திலையிலும் தன்னிலை தவறாத
எம தர்மன் பிரதியாய் அவனிடமே.

தர்மத்தை அகிலத்தில் காத்திடவே
தனக்கு வரமாய் கிடைத்திட்ட
யுகத்தை மாற்றிட பிறந்தவனுக்கு
யுதிஷ்டிரன் என்று பெயரிட்டான்

கவிதை - 5



கீதை - 1 

கண்ணன் சொன்ன கீதையில்
காதில் கேட்டதை மட்டும்
கவிதையாய் கொணர்கிறேன்,..

புல் பூண்டு முதல்
புழு பூச்சி வரையிலான
புதுப்புது உயிர்களெல்லாம்
அவனியில் தோன்றுவதன்
அவசியம் யாதென வினவினான்
அனைத்தும் அறிந்த ஆண்டவன் ..

பஞ்சபூதங்களின் பிரதிப்பகுதியே
உயிர் கொண்ட உடலின்
உண்மை நிலையிதுவே!!!
உதிரமே நீராகும் - ஊனுள்ள
உடலே நிலமதுவாம் - நெருப்பே
உணர்ச்சி தீயாய் எரிந்திட
உயிரளிக்கும் சுவாசமே
உன்னத வாயு என்பேன்.
அறிவளிக்கும் ஆத்மாவே
ஆகாயம் என்றுரைத்தான்
அகிலம் போற்றிடும் அர்ச்சுனவனுக்கே!

ஆக்கலும் அழித்தலுமியலாததே
ஆத்மா எனறுரைப்பேன் - அதை
நிலத்தினுள் புதைத்திட முடியோம்
நீர் கொண்டு நீக்கிடயியலேன்
நெருப்பிட்டு எரிக்கவும் இயலேன
கேசவனுரைத்த பதிலுக்கு
கேள்வியையே விடையாக்கினான்
பரிதவிக்கும் பார்த்தனவன்..

உலகின் உள்ளதெல்லாம்
உடற்கொண்டே பாரக்கின்றோம்.,
உண்மை எதுவென்றெனக்கு
உரைப்பாய் நீயே என்றுரைத்தான்..

அறிவை உணர ஆத்மாவே
அருந்துணை செய்திடுமே,
அதைப் பெறும் முறையையே
அதிசய சுபாவமாகும்..
அறிவின் வெற்றியென்பது
ஆத்மாவை அறிவதென்பேன்.,
அறிவரனைவருமே தர்ம
அதர்ம வழிதனை அகிலத்திலே!!

காரிருள் நிறைந்து - உடற்
களி மட்டும் புணருகின்ற
காழ்ப்புணர்ச்சி நிலையே தமஸென்பேன்,
மோகம் மூப்படைந்து தானென்ற
அகங்காரமிகக் கொண்ட
அதீத இரஜஸ் நிலையதுவே!!
சத்யம் யாதென அறிந்திட்ட
சத்வமென்ற ஞான நிலையே
உனக்குள் இறைவனைத் தேடிடும்
உன்னத நிலையாகும்...

ஆசையும் அதீத எதிர்பார்ப்பொன்றே
அதர்மம் பற்பல புரிந்திட
அழைத்து செல்லும் வழியென்பேன்..,
சுயநலம் தலைக்குடிகொண்டு
சுற்றம்படும் துன்பமதிலேயே
சுகமிகக் காணுகின்ற
அற்ப உடலை அழிப்பதே
அதன் தண்டனையாகுமென்பேன்..

புதியன புகுமுன் பழையன கழிதற்போல
புதுஉடற் தேடியே புறப்படுமே
புண்ணிய ஆத்மா அதுதன்
பூத உடல் நீங்கியே!!
அற்ப உடல் நிங்கி
அற்புத கொண்ட உடலையது
அடைகின்ற அந்நொடியிலதன்
அதர்மம் அழிந்திடுமே!!
ஆத்மா அழிவதில்லை - அழிவது
ஆசை கொண்ட உடலொன்றே!!!!

ஆத்மாவை சூழும் அந்த
அதர்ம காரிருள் நீக்கி
அற்புத பரமாத்வாவின் திரு
அடிதனை சரணடைவதொன்றே
அது கொண்ட கடமையென்று
கண்ணனவன் உரைத்திடவே
களங்கண்டு கொலைபுரிந்தால்
கர்மமென் ஆத்மாவை அது
கரை படிய செய்திடாதாயென
கலங்கி நின்றான் காண்டீபன் ..

உன்னத உலகொன்றை உத்தமமாய்
உருவாக்கிட உறுதுணை புரிந்திடும்
கடமை மட்டும் உனதென்பேன்,
கர்மமது எனையே வந்தடையும்,
கரத்தில் காண்டீபமேந்தி
களம் புகுவாயென்றே
கண்ணனவன் உரைத்தானே!!!

கவிதை - 6



கீதை - 2 

தர்மயுத்தமதன் முடிவினிலே
தம்மில் பெறுவது சுகதுக்கம்
இவ்விரண்டில்யாதென இறைவன் வினவிட
இருதயமதிலே இன்பமும் துன்பமும்
இரண்டறக் கலந்தே இருக்குமென
இந்திரன் தவப்பிரதியவன்கூறிடவே
வெல்லும் போரினில் மகிழ்ச்சியடையின்
வென்றிடுமே அகங்காரம் உனையது
அவனியாளத் தூண்டிடும் என்றும்
அதர்ம வழிதனில் அழைத்துச் சென்றிடுமே!!!
மகாயுத்தமதில் மாள்பவன் நீயெனில்
மறுபிறவி எடுத்திடுவாய் நீயிங்கே
மனதில் மலையாய் குரோதங்கொண்டே!!!

பெற்றிடும் முடிவதனில் நீயென்றும்
பற்றின்றி யுத்தமதை செய்திடில்
மட்டற்ற மகிழ்ச்சியும் நீ பெறாய்,
திக்கற்ற துக்கமதையும் தொடாய்!!!
கூட்டுனில் குடிகொண்ட ஆத்மாவதனையே
குறையின்றி உணர்ந்திட்டால் வாழ்வின்
கர்மயோகி ஆகிடுவாய் நீயென
கனிவாய் மலர்ந்தான் கண்ணனவனே!'

கர்மயோகி ஆகிடவே களிநீங்கி
கானகத்தே துறவறம் பூண்டாலென்ன
காண்டீபம் ஏந்தியவன் கேட்டிடவே
தர்மமதை உணரந்தோரெல்லாம் கர்மம்நீங்கி
தவவாழ்வதனை வேண்டி சென்றிடின்
அதர்மமது வென்றிடுமே, அழகு
அவனியதை ஆளுமதர்ம வழிதனிலே!!!
பிதாமகன் ஏற்றிட்ட தியாகமதனால்
பிறந்திட்ட யுத்தமிது என்பேனான்
பாண்டுமன்னன் சென்றிட்ட துறவறத்தால்
ஆண்டுவிட்டதே அதர்மம் இங்கே!!!
சாதிக்க சத்வமது தொடங்கிவிடின்
சாய்ந்திடுமே அதர்மமது அகிலத்திலே!!!
பலனை பார்த்திடாதே என்றென்றும்
பார்த்தனே செய்திடுவாய் நீகொண்ட
கடமையினை சிரமேற்கொண்டே அதன்
கர்மப்பலனிற் இச்சை கொண்டாயின்
தர்மமது நீங்கிடுமே கர்மம்விட்டு..

அன்பு நிறைந்திட்ட தர்மமதனையே
அவன் கொண்ட சந்ததிக்கு வழங்கிடின்
அவனியிலே செழித்திடுமே சத்தியமே!!!
சிருஷ்டியே பரமாத்மா அதனுள்ளே
சிறு அங்கமே மனிதனென்பேன்,
முக்குணத்தை நீ தியாகம் செய்து
நிர்க்குணமதை பெற்றுட்டால் அரிய
பரமாத்மாவை கண்டிடலாம் பார்த்தனே நீ!!!

பெற்ற பிராப்தமதை பேணிட முயன்றால்
பெறுவாயே பெருந்துயரொன்றை நீயே!!
அதிகார கர்மமேற்று
அதனை நீ நிறைவேற்று! !
அதன் பலன் சேர்ந்திடுமென்றும்
ஆண்டவன் அடிதனிலே!!
அன்பின் வழிதனை அடிபற்றி
ஆண்டவனை அறிந்திடலாம- ஆசையின்றி
ஆற்றும் பணியொன்றே பூரணமமாம்
ஆணவமதையே நீக்கிவிடின்...

பலனதனை நோக்கிடின் விருப்பந் தோன்றுமது
பறித்திடுமே உனதானந்தமதையே
குரோதம் தோன்றிடும் உள்ளத்திலங்கு
குடிகொண்டிடும் மோகம் அதனால்
ஞானத்தை இழந்திடுவாய் என்றும்
ஞாலத்திற்கு எதிரியாவாயதனால்...
பார்த்தனே நம்பிக்கை கொள்வாய்
பரமாத்மா மீது மட்டும் - அதனால்
சமர்ப்பணமதை அளித்திடுவாய் அவனுக்கே!!
ஞாலத்தின் மிகப்பெரிது யாதெனின்
ஞானம் கொண்டு பார்ப்பதுவே!!!!

தாமே பரமாத்மாவாவென வினவிட்டான்
தனுசேந்திய தனஞ்செயன் அவனே!
அகங்காரம் துணைநிற்கும் குரோதத்துடன்
ஆசையென்ற தீயை விட்டெழிந்து
ஆண்டவன்பாதம் சரணடைவாய்!!
தூண் துரும்பு யாவிலுமிருப்பேன்
என்னில் உள்ளதை உணருமுன்
உன்னில் என்னையே கண்டிடின்
சத்யமறிந்திடுவாய் சய்வசச்சியே!!
சமர்ப்பணமதற்கிணை இறைவன் திருவடி
சரணடைவாய் சகலமும் துறந்தே!!

சந்திர சூரியன் சகலமும் நானே,
செடியும் கொடியும் தளிரும் நானே!
சொர்க்கம் நரகம் மொத்தமும் நானே!!
காந்தாரி புதல்வனும் நானே,
காண்டீபதாரியும் நானோயென
கார்மேகன் மொழிதனைக் கேட்டு
இங்கிருக்கும் நீர அவனியில்
எங்கெங்கும் எவ்வாறிரூப்பீர்
என்றுரைத்தான் பல்குனியவனே!!

அற்ப உடலதைக்காணாதே அர்ச்சுனாநீ
ஆத்மா அதைமட்டும் கண்டிடுவாய்!!
ஆடைபலவற்றை பூட்டி சரீரமதையே
அவனியில் புதைத்தவன் நானே!!
தர்மமதுதன் பலமிழந்து வீழும்போது
தான் வருவேன் அதை நிலைநாட்டிடவே,
அதர்மம் பெருகுவதை அழித்திடவே
அவதாரம் பல எடுப்பவனானே!

மறை காக்க வந்த மச்சவதாரம் நானே- துர்
மன்னர்களை அழித்திட்ட பரசுராமனும் நானே!
உலகை அளந்திட்ட வாமனன் நானே
உத்தமபுத்திரன் ராமனும் நானே!!
மும்மூர்த்தியும் நானே அவர்கொண்ட
முத்தேவியரும் நான் ஒருவனேயாவேன்.
ஆணும் நானே பெண்ணும் நானே
அதற்கிடைவாழும் அர்த்தநாரியும் நானே!!
ஒப்பற்ற சகலமும் நானே- அதில்
ஒன்றுமில்லாத சூன்யமும் நானே
பிறப்பு இறப்பின்றி சிறப்புற்றவன்
இவ்வகிலமாளும் இறைவன் நானேயென
திருவாய் திறந்தனன் திருமாலவனே!..

கவிதை - 7


கீதை -3 

பரமாத்மா யாதென்று உரைத்திட்ட
பரந்தாமன் மொழிகேட்ட பார்த்தனவன்
பரவச நிலைதனையே கொண்டான்
பாற்கடல் வாசனவன் பார்வையினாலே!!

ஒப்பற்ற சகலமும் நானேயதில்
ஒன்றுமில்லாத சூன்யமும் நானேயாவேன்!!
சங்கல்பமதை தியாகம் செய்திட்டு
சமர்ப்பணம் அளித்திடுவாய் நீஎனக்கே!

இறைவன் இட்ட ஆணையொன்றினையே
இறுதிவரை செய்வதுமே அவனிடம்
சகலத்தையும் அளிக்கும் ஒன்றே
சமர்ப்பணம் என்று சொல்வேன்
உன்னை தனிமனிதனில் சமர்பித்தால்
நீயும் பெறுவாய் அவர்குணமே!!

கர்ணனவன் மித்திரன்பால் சமர்ப்பணமே
கர்மவினையாய் அமைந்திடுமே அவனுக்கே!
இதயங் கொண்ட சமர்ப்பணமதையே
இறைவன் ஒருவனுக்கே அளித்திடுவாய்!.
சிந்தைகொண்ட சந்தேகம் விடுத்து
விந்தையானவனிடம் சமர்ப்பிபாயுனையே!
இறைபக்தி அதுஒன்றையே நான்
இவ்வுலகில் மிகப் பெரியதென்பேன்.

வேதாந்த யோகமதை விவேகமாயுணர்ந்து
சுயதர்மயோகம்தனை சுகமாய் பெற்றால்
கர்மயோகம்தனில் கடமையை நீயுணர்ந்தால்
பக்தியோகமதில் பரமனைக் காண்பாயே!

ஞாலத்திற் பெரியது யாதெனின்
ஞானயோகமே! - அதன்வழியே
கடவுளை உணரந்திடலாம் நீயென்ற
கண்ணன் திருவாய் மொழிகேட்டு
களிப்புற்றான் காண்டீபன் அவனே!!

சரீரமது கொண்ட பலனெதுவோ
சாரங்கனிடம் வினவினான் வியப்போடே!!
சகலமுமான பரமாத்மாவைக் கண்டிட
சரீரமது உதவுவதாலே அதுதன்
ஜனனத்தினாலே அடையுமே மேன்மை!!
கருணையப் பெறவும் எல்லையுண்டு
கடுந்தண்டனைதான் அதற்கு மேலே!..

புதிய உடல்தேடி புறப்படுமாத்மாவது
புண்ணியம் பெற்றிடும் புதுதர்மவழிதனிலே
புருசோத்தமன் பொன்மொழி கேட்ட
புண்ணியத்தாலே புதுவாழ்வு பெற்று
பக்தியின் நிலையென்பது யாதென
பார்த்தனவன் வினவினான் பரவசத்தோடே!!

அனுதினமும் அழுக்கடையும் மனதையே
அவன்பக்தியே மாற்றிடும் நெறியினிலே!!
நன்மை செய்வோர் அவருக்கே
நானும் இடந்தருவேன் என்னிதயந்தனிலே!

மாதவனே நீஎனக்கு காட்டிடுவாய்
மகிமையுடைய உனதுருவம் தனையென
பக்தியுடனே வேண்டி நின்றான்
பல்குனியவன் பரவசத்துடனே!!

அமரரும் கண்டிராத அவனுருவையே
அகிலமுழுதும் அவனொளி பரவ
அர்ச்சுனவனுக்கே காட்சி தந்தான்
விழிகள் கொண்ட வியப்பினிலே
விஜயன் கண்டான் விஸ்வரூபமதையே!!

கவிதை - 8



கர்ணன் !!

கருவில் என்னை சுமந்தவள்
கண்ணெதிரே நிற்கின்றாள்..
கரம் நீட்டி அணைக்கவில்லை
.
அம்மா என ஆசையாக 
அழைக்க முடியவில்லை
மகன் என்ற உரிமையில்
மடி சாய முடியவில்லை

என்னுடன் பிறந்தோர் ஐவருண்டு
எனக்காய் யாரும் இல்லை...
உறவுகள் பல இருந்தும்
உரிமைதான் எனக்கு இல்லை.

நாடாளும் குலத்தில் நான் பிறந்தும்
தேரோட்டும் குடியினனாய் வாழ்கிறேன்..
அரசானாய் முடிசூட வேண்டியவனுக்கு
அவமானங்களையே சூட்டினர்...

வரமா சாபமா
புதிரா புனிதமா
என் வாழ்க்கை...
விடைதேடுகிறேன்...

எல்லாம் எனக்கிருந்தும்
ஏதுமின்றி நிற்கின்றேன்
தனியாக...


கவிதை - 9



காண்டீபதாரி !!

இந்திரனின் பிரதியாய் 
சந்திர குல தோன்றலாய் 
மந்திரத்தின் மகிமையினால் 
குந்தியவள் பெற்றெடுத்தாள்
குரு வம்ச புத்திரனாய்....

அமரவேந்தன் அருள் கொடுத்தான்
அகிலத்தில் வாழ உயிர் கொடுத்தான்
அம்புலி குலம் தழைக்க வைத்தான்
அவன் ஆற்றல்தனைக் கொடுத்தான்

துர்வாசன் உச்சரித்தான் சொல்லினால்
துரோணன் உருக்கொடுத்தான்
வில்லினால்
பரமனவன் சரம் கொடுத்தான் தவத்தினால்
பாலினம் மாறி நின்றாய் வரத்தினால்

கண்ணனின் நட்பை பெற்றாய்
காண்டீப வில்லைப் பெற்றாய்
மாதவன் மொழிய(யை)க் கேட்டாய்
மா தவத்தின் பலனைப் பெற்றாய்

கந்தர்வர் கலையைக் கற்றாய்
கங்கை மகன் அன்பைப் பெற்றாய்
வேங்கையாய் வில் தொடுத்தாய்
வேல்விழியாள் மனம் கவர்ந்தாய்

பாஞ்சாலி துயர் நீக்க சூளுரைத்தாய்
பாரதப் போரில் முதன்மையானாய்
பாரந்தாமன் சொல்கேட்டு நீ நடந்தாய்
பாரினில் தர்மம் வாழ துணை நின்றாய்.

கவிதை - 10




கோபியர்கள் பலர் தவமிருக்க
கோபாலன் கரம் நீ பிடித்தாய் .
கன்னியர் பலர் நோன்பிருக்க
கண்ணன் மனமதை நீ வென்றாய்.
இதயத் தோட்டத்திலே
இவன் மனம் பூத்திருக்க
உள்ளத்தில் தினம் நினைத்து
உயிராய் உருகி நின்றாய்

தையல் நெஞ்சமது
மையல் கொண்டதுவே
மை பூசும் கண்களது
மன்னவன் மயக்கத்திலே...
மாதவனை சேர்ந்திடவே
மா தவம் புரிந்தனையோ??

உயிரின் மையெடுத்து
உடன் வரைந்தாய்
காதல் மன்னனுக்கே
காதலால் ஓர் கடிதம்...

கண்டதும் வந்து நின்றான்
கண்ணன் உன்னை வென்று வந்தான்
கண்ணனைக் கண்டதும்
கண்ணில் பொங்கியது
கண்ணீரில்லை காதலே!!!

கன்னி நீ வென்றதானால்
கன்னியர் பலர் தினமும்
கண்ணனுக்கு மடல் எழுதி
கண்ணுறங்கா நோன்பினில் காத்திருக்கின்றனர் காதலோடு...
காதலை உணர்வானோ??
கள்வனவன் வருவானோ???
காதலையும் வெல்வானோ??





1 comment:

Powered by Blogger.