Kurukshetram


குருச்ஷேத்திரப் போர்



குருஷேத்திரப் போர் மகாபாரதக் காவியத்தில் நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். 

இப்போர் அஸ்தினாபுரம் அரியணைக்காக கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே குருச்சேத்திரம் என்ற இடத்தில் நடைபெற்றது. 

இவ்விடம் தற்போதைய ஹரியானா மாநிலத்தில் உள்ளது.

இப்போரானது 18 நாட்கள் நடைபெற்றது. 


இந்த 18 நாள் போரானது  நான்கு பருவங்களாக பிரிக்கப்பட்டுள்ளது அவை....

பீஷ்ம பருவம்,

துரோணா பருவம்,

கர்ண  பருவம்,

சல்லிய பருவம்.

போரின் இறுதியில் பாண்டவர்கள் வென்றனர்.


போருக்கான காரணங்கள் :

அஸ்தினாபுரத்தின் சூதாட்டமண்டபத்தில் துரியோதனனுக்கும், தருமருக்கும் (யுதிஷ்ட்ரன்) இடையே நடந்த சூதாட்டத்தில், தருமர், தனது இந்திரப்பிரஸ்தம் நாட்டையும், தன்னையும், தன் சகோதரர்களான பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் மற்றும் தங்கள் மனைவி திரெளபதியையும் துரியோதனனிடம் பணயமாக வைத்து தோற்றான்.

பீஷ்மர், விதுரன், துரோணர், கிருபர் மற்றும் அஸ்தினாபுர மன்னன் திருதராஷ்ட்டிரன் ஆகியவர்களின் ஆலோசனைப்படி, சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் 12-ஆண்டு கால வனவாசமும், ஒரு வருட அஞ்ஞான வாசமும் மேற்கொள்ள வேண்டும் என்றும்,

ஒரு வருட அஞ்ஞான வாசத்தின் போது பாண்டவர்கள் கண்டு கொண்டால் மீண்டும் 12-ஆண்டு கால வனவாசமும், ஒரு வருட அஞ்ஞான வாசமும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் ஒப்பந்தம் ஆயிற்று.

இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் மட்டுமே சூதாட்டத்தில் இழந்த நாடு மீண்டும் பாண்டவர்களுக்கு கிடைக்கும் என்று பாண்டவர்களுக்கு நினைவுபடுத்தப்பட்டது.

ஒப்பந்தப்படி, 12-ஆண்டு கால வனவாசமும், ஒரு வருட அஞ்ஞான வாசமும் முடிந்தவுடன், பாண்டவர்கள் தாங்கள் சூதில் இழந்த நாட்டை கேட்டு ஸ்ரீகிருஷ்ணரை, அஸ்தினாபுர மன்னன் திருதராஷ்ட்டினரிடம் தூது அனுப்பினர்.

கிருஷ்ணரின் கோரிக்கையை துரியோதனன் ஏற்கவில்லை.

காரணம் பாண்டவர்கள் ஒராண்டு தலைமறைவு வாழ்வின் போது தான் அர்ஜுனனை கண்டு கொண்டதால், பாண்டவர்கள் மீண்டும் 12-ஆண்டு வனவாசம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினான்.

ஆனால் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் திருதராஷ்ட்டிரரிடம், பாண்டவர்களுக்கு ஐந்து ஊர்கள் அல்லது ஐந்து கிராமங்கள் அல்லது ஐந்து வீடுகளாவது வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

துரியோதனன் பாண்டவர்களுக்கு ஊசி முனை அளவு கூட இடம் அளிக்க முடியாது என ஆணவமாக பேசி, தூது வந்த கிருஷ்ணரை அவமதித்து அனுப்பி விட்டான்.

பின்னர் பாண்டவர்கள் கௌரவர்களுடன் போரிட்டு இழந்த நாட்டை மீட்பது என முடிவு செய்தார்கள்.





இலட்சக்கணக்கான வீரர்கள் அழிய பாரதப்போர் தொடங்கும் முன் இரு சாராரும் சில விதிமுறைகளைப் பின்பற்ற ஒப்புக் கொண்டனர்.

போர் பகலில் மட்டுமே நடைபெறும்.

ஆயுதமின்றி இருப்போரிடம் போரிடக் கூடாது

புறமுதுகிடுவோரை தொடர்ந்து சென்று தாக்கக்கூடாது

இரு வீரர்கள் போரிடுகையில்..மூன்றாமவர் இடையே புகுந்து ஒருவரைத் தாக்கக் கூடாது

அடைக்கலம் அடைந்தவர்களைக் கொல்லக்கூடாது

யானைப் படையுடன் யானைப்படையும், தேர்ப் படையுடன் தேர்ப்படையும், குதிரைப் படையுடன், குதிரைப் படையும், காலாட் படையுடன், காலாட்படையும் மட்டுமே போரிட வேண்டும்.

இப்படி ஒரு நியதியை ஏற்படுத்திக் கொண்டாலும் சில நேரங்களில் அதையும் மீறி போரிட நேர்ந்தது.

ஆர்வமாய் இருந்த அர்ஜூனன், எதிரே நிற்கும் தன் உறவினர்களைப் பார்த்து, இவர்களுடன் போர் புரிவதா?? உலகம் என்னை பழிக்காதா?? என துயரம் கொண்டு, போர் புரிய இயலாமல் அவன் ரதத்திலே அமர்ந்து விட...

பகவான் கண்ணன், தக்கது எது?? தகாதது எது?? என விரிவாய் சொல்கிறார்... அதுவே பகவத் கீதை. 

கண்ணன், அர்ஜுனனுக்கு சொல்வது போல நம் அனைவருக்கும் கூறிய விஷயங்கள் இவை.

அர்ஜுனா, வருந்தாதே. தகுதி இல்லாதவரிடம் இரக்கம் காட்டாதே! ஞானிகள், இறந்தவர்களுக்காகவோ, இருப்பவர்களுக்காகவோ துயரம் கொள்வதில்லை. இங்கு உள்ளவர்களின் உடல் அழிந்தாலும் இருப்பார்கள். அவர்கள் உயிர் அழிவதில்லை. இந்தப்பிறவியில் உயிருடன் கூடிய உடம்புக்கு இருக்கும் இளமை, அழகு, முதுமை மீண்டும் மறுபிறப்பிலும் ஏற்படும். இப்படி தோன்றுவதும், மறைவதும் உயிர்களின் இயல்பு என்பதை உணர். இதுவே உலக இயற்கை என்ற தெளிவு பெற்றால், இன்ப துன்பங்கள் யாரையும் நெருங்காது. இதை உணர்ந்தவர் எதற்கும் கலங்குவதில்லை.

அர்ஜுனா, நிரந்தரமில்லா உடலின் அழிவுக்கு கலங்காதே. உயிர் அழியாது. தனது புண்ணிய பாவ செயல்களுக்கு ஏற்ப மறுபிறவி அடையும். ஆத்மா கொல்வதும் இல்லை. கொல்லப்படுவதும் இல்லை. ஆகவே கலங்காது எழுந்து போர் செய். கடமையை நிறைவேற்று.

ஆத்மாவிற்கு பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை. இது எப்போதோ இல்லாதிருந்து பிறகு திடீரென பிறந்ததன்று. இது என்றும் இறவாதது. என்றும் பிறவாதது. அதாவது உடல் கொல்லப்பட்டாலும், உயிர் கொல்லப்படுவதில்லை.

கிழிந்து போன பழைய ஆடைகளை விடுத்து, புது ஆடைகளை உடுத்துவது போல் உயிர் நைந்து போன உடல்களை விட்டுப் பிரிந்து புதிய உடலைப் பெறுகிறது. எந்த போர்க்கருவியும் உயிரை வெட்டாது. உடலை எரிக்கும் தீ உயிரை எரிப்பதில்லை. வெட்டினாலும், குத்தினாலும் உயிருக்கு ஒரு துன்பமும் இல்லை. ஆகவே மாளப்போகிறவர்களுக்காக நீ ஏன் அழுகிறாய்? அவர்கள் வினைப் பயனை அவர்கள் விதிப்படி அடைவர்.

பிறந்தவர் இறப்பதும், இறந்தவர் பிறப்பதும் இயல்பு. அதற்காக ஏன் வருத்தம். இவ்வுலக நியதியை யாராலும் மாற்ற இயலாது. ஆகவே நீ உன் கடமையை ஆற்று.

இந்த ஆன்மாவின் செயல் விந்தையானதுதான் எனினும் மாற்றமுடியா தன்மையைக் கொண்டது. எல்லார் உடம்பிலும் உள்ள ஆத்மாவை யாராலும் கொல்ல முடியாது. ஆகவே, நீ யாருக்காகவும் வருந்த வேண்டாம். தவிர்க்க இயலா போர் வந்து விட்டது. வீரர்களை வரவேற்க சொர்க்கவாசல் தயாராய் விட்டது. சிறந்த வீரர்கள் அங்கு செல்ல உன் கடமையைச் செய். இது தர்மயுத்தம் என்பதை நினைவில் கொள். இங்கு நீ தயக்கம் காட்டினால், புகழை இழப்பாய், அத்துடன் மட்டுமின்றி, அது உனக்கு பழியும் தரும்.

இரக்கத்தால் நீ போரிடவில்லை என பகைவர்கள் எண்ணமாட்டார்கள். போரிட அஞ்சுகிறாய் என சிறுமைப்படுத்துவர். வீரனான உனக்கு அந்த இழுக்கு வரலாமா? இதைவிடப் பெருந்துன்பம் எதுவுமில்லை. வென்றால் இந்த மண்ணுலகம், வீர மரணம் அடைந்தால் விண்ணுலகம். இதனை மறக்காது துணிந்து போர் செய்.

வெற்றி, தோல்வி பற்றியோ, இன்ப. துன்பம் பற்றியோ, இலாப, நஷ்டம் பற்றியோ கருதாமல் ஊக்கத்துடன் போர் செய். பழி, பாவம் உன்னைச் சாராது. புகழும், புண்ணியமும் உனக்குக் கிடைக்கும்.

என மேலும் பலவாறு கண்ணன், அர்ஜுனனுக்கு சமாதானம் கூறினார்.

கண்ணனின் அறவுரைக் கேட்டதும், பார்த்தனின் மனக்குழப்பம் தீர்ந்தது. அவன் கண்ணனை வணங்கி, கண்ணா, என் மயக்கம் ஒழிந்தது. என் சந்தேகங்கள் தீர்ந்தன. என் தயக்கங்கள் அகன்றன. இனி உன் சொல் படி நடப்பேன் எனக்கூறி போரிடத் தயாரானான்.


யுத்த களம் பற்றி சில விவரங்கள் 




இன்றைய கால கட்டத்தில் வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டம் தான் நமக்கு. வெற்றி வேண்டுமாயின் எப்படியும் போராடித்தான் ஆக வேண்டும். கதை நடந்ததாய் சொல்லப்படும் காலத்தில் அப்படி இல்லை. போருக்கு என சில நியமங்கள் இருந்தன.

படைகள் நான்கு வகைதான்

ரதப்படை (தேர்ப்படை), கஜப்படை (யானைப்படை), துரகப்படை (குதிரைப்படை), பதாதிப்படை (காலாட்படை).

இந்த நான்கு படைகளும், கீழ்காணும் அளவுகளில் இருந்தால் அவை ஒரு அக்ரோனிப் படை எனப்படும்.

ஓர் அக்ரோணி படை என்பது

21870   : தேர்கள் (ரத)
21870   : யானைகள் (கஜ)
65610   : குதிரைகள் (துரக)
109350 : காலாட்படைகள் (பதாதிகள்) அடங்கியது ஆகும்.

இதில், ரதப்படை தான் இருப்பதில் உயர்ந்தது. ஒரு அக்ரோனிப் படைக்கு ஒரு ரதர்தான் (ரதப்படையில் சிறந்த வீரர்) தலைமை வகிப்பார். அவரவர் திறம் கொண்டு அவரை கீழ்க்கண்டவாறு பிரிப்பர்.



அதிரதர் 

இவர்கள்தான் இருப்பதிலே திறம் அதிகம் உள்ளவர்கள். எவர் ஒருவர், தனியாளாக ஒரு தேரின் மேல் நின்று தமது ரத, கஜ, துரக, பதாதிகளுக்கு அழிவுவராமல் காத்துக்கொண்டு, ஒரே சமயத்தில், பல்லாயிரம் தேர் வீரர்களோடு போரிடும்/போரிட்டு வெல்லும் வல்லமை உடையவரோ அவரே அதிரதர்.


மஹாரதர்

இவர்கள், அதிரதருக்கும் கீழே, அதாவது, தனி ஒருவராக நின்று, ஒரே சமயத்தில், பதினோராயிரம் தேர்வீரரோடு போரிடும்/போரிட்டு வெற்றி கொள்ளும் வல்லமை பொருந்தியவர்கள்.


சமரதர்

இவர்கள் திறமை, அதற்கும் கீழே, ஒரு சமயத்தில், ஒரு தேர்வீரரோடு, போரிடும் / போரிட்டு வெற்றி பெரும் வல்லமை கொண்டவர்.


அர்த்தரதர்

இவர்கள், அப்படி, ஒருவரோடு, ஒரு சமயத்தில், ஒருவர் மட்டும் போரிடும் போதும், தமது, ரதம் மற்றும் உடமைகளை இழந்து விடுபவர்.


போர் விதிமுறைகள் 

கையில் ஆயுதம் இல்லாத ஒரு வீரன், மீண்டும் ஆயுதம் ஏந்தும் வரை அவனை எதிர்த்து போரிடக்கூடாது. 

ஆண்மையற்றவனிடம் ( திருநங்கைகள்) போரிடக்கூடாது. 

போரில் காயம் பட்டு போர்க்களத்திலிருந்து வெளியேறிய வீரனை தாக்கக் கூடாது. 

மேலும் காயம் அடைந்த வீரனை காக்கும் போர் வீரனையும் எதிர்த்து போரிடக்கூடாது. 

போரிடாத வீரனை தாக்கக் கூடாது. 

கதிரவன் உதயத்திலிருந்து, மறையும் வரை மட்டுமே போரிட வேண்டும். கதிரவன் மறைந்த பின் போரிடக் கூடாது.

போரில் சரண் அடைந்தவர்களை கொல்லாமல், போரில் வென்றவர்கள் காக்க வேண்டும். 

காலாட்படை வீரர்கள், காலாட்படை வீரர்களுடன் மட்டும் போரிட வேண்டும், அது போல் குதிரைப்படை, யாணைப்படை, தேர்ப்படை வீரர்கள் தத்தமது தகுதிக்குரிய வீரர்களுடன் மட்டும் போரிட வேண்டும். 

மகாரதர்கள், மகாரதர்களுடனும், அதிரதர்கள், அதிரதர்களுடன் மட்டுமே போரிட வேண்டும். 

போரின் இரவு வேளையில் இரு அணிப் படையினர், ஒருவரை ஒருவர் சந்திக்க விரும்பினால் சந்திக்கலாம். பீஷ்மர் வகுத்த இப்போர் விதி முறைகள் கௌரவர் படையினரும், பாண்டவர் படையினரும் ஏற்றுக் கொண்டனர். 

ஆனால் இந்த போர்விதி முறைகளை, அபிமன்யுவின் வீரமரணத்திற்குப் பின் இரு அணியினரும் கடைப்பிடிக்கவில்லை.



குருச்சேத்திரப் போரின் பிரம்மாண்டமான போர் வியுகங்கள் 




40 லட்சம்பேர் பங்குபெற்று 18 நாட்கள் நடந்த மிகப் பிரமாண்டமான மகாபாரதப் போரில்  அமைக்கப்பட்ட வியுகங்கள்

1. 
கிராஞ்ச வியுகம் (Heron Formation) 

2. மகர வியுகம் (Crocodile Formation)

3. கூர்ம வியுகம் (Tortoise or Turtle Formation)

4. திரிஷுல வியுகம் (Trident Formation)

5. சக்ர வியுகம் (Wheel or Discus Formation)

6. கமலா வியுகம் or பத்மா வியுகம் (Lotus Formation)

7. கருட வியுகம் (Eagle Formation) (மாவீரன் கர்ணனின் வியுகம்)

8. ஊர்மி வியுகம் (Ocean Formation)

9. மண்டல வியுகம் (Galaxy Formation)

10. வஜ்ர வியுகம் (Diamond or Thunderbolt Formation)

11. சகட வியுகம் (Box or Cart Formation)

12. அசுர வியுகம் (Demon Formation)

13. தேவ வியுகம் (Divine Formation)

14. சூச்சி வியுகம் (Needle Formation)

15. ஸ்ரிங்கடக வியுகம் (Horned Formation)

16. சந்திரகல வியுகம் (Crescent or Curved Blade Formation)

17. மலர் வியுகம் (Garland Formation)

18. சர்ப வியுகம் (Snake Formation)

குருசேத்திரப் போரின் போது பாண்டவர்கள் தரப்பில் 7 அக்குரோணி படைகளும், கௌரவர்கள் தரப்பில் 11 அக்குரோணி படைகளுமாக 18 அக்குரோணி படைகள் பங்கெடுத்தது. ஒரு அக்குரோணி என்பது 21870 தேர்களையும், 21870 யானைகளையும், 65610 குதிரைகளையும், 109350 படை வீரர்களையும் உள்ளடக்கியது.


படைப்பிரிவுகளின் கணக்கு

படைப்பிரிவுகள் பின்வருமாறு கணக்கிடப்படுகின்றன,

ஒரு தேர், ஒரு யானை, மூன்று குதிரைகள், ஐந்து படைவீரர்கள் கொண்ட பிரிவு, ஒரு பட்டி எனப்படும்.

3 பட்டிகள் கொண்டது 1 சேனாமுகம்

3 சேனாமுகங்கள் கொண்டது 1 குல்மா

3 குல்மாக்கள் 1 கனம்

3 கனங்கள் 1 வாகினி

3 வாகினிகள் 1 பிரிதனா

3 பிரிதனாக்கள் 1 சம்மு

3 சம்முக்கள் 1 அனிகினி

10 அனிகினிக்கள் 1 அக்குரோணி


குருசேத்திரப்போர் படை விபரங்கள்

குருசேத்திரப் போரில் கௌரவர்களுக்குச் சார்பாக அஸ்தினாபுரத்துப் படைகளும் அவர்களுக்கு ஆதரவான பிற படைகளுமாகப் 11 அக்குரோணி படைகள் ஒருபுறத்திலும், பாஞ்சாலம், விராடம், போன்ற பல்வேறு அரசுகளின் படைகளை உள்ளடக்கிய பாண்டவர்களுக்குச் சார்பான 7 அக்குரோணி படைகள் ஒருபுறத்திலுமாகப் போரிட்டன.


கௌரவர் தரப்புப் படைகள் 

துரியோதனன் தரப்பில் போரிட்ட படைகள்

பாகதத்தன் படைகள் - 1 அக்குரோணி

சல்லியனின் மதுராப் படைகள் - 1 அக்குரோணிகள்

பூரிசுவரர்கள் - 1 அக்குரோணி

கிருதவர்மன் (கிருஷ்ணனின் நாராயணிப் படைகள்) - 1 அக்குரோணி

சயத்திரதன் படைகள் - 1 அக்குரோணி

காம்போச அரசன் சுதகசினனின் படைகள் - 1 அக்குரோணி

விந்தன், அனுவிந்தன் என்போரின் அவாந்திப் படைகள் - 1 அக்குரோணி

ஐந்து கேகய சகோதரர் படைகள் - 1 அக்குரோணி

அஸ்தினாபுரத்துப் படைகள் - 2 அக்குரோணி

இன்றைய வங்காளதேசத்தை தன்னுடைய அசுர பலத்தால் அடக்கி ஆண்ட துரியோதனின் உயிர் நன்பன் மாவீரன் அங்க தேசத்து அரசன் கர்ணன் திரட்டிய படைகள் - 1 அக்குரோணி

சகுனி கௌரவப் கூட்டணி படையணிகளுக்கு போர்த் தந்திரங்கள் சொல்லிக் கொடுத்தார்.

சேர நாட்டு மன்னன் “உதியஞ்சேரல்” கௌரவப்படைகளுக்கு உணவு அளித்தார் என்றும் அதனால் உதியஞ்சேரனனை “பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்" என்று அழைக்கப்பட்டார் என்று பழந்தமிழ் பாடல் ஒன்றில் குறிக்கப்பட்டுள்ளது.



பாண்டவர் தரப்புப் படைகள்

விருஷ்னி வம்சத்துச் சாத்யகியின் படைகள் - 1 அக்குரோணி

நீலனின் மகிசுமதிப் படைகள் - 1 அக்குரோணி

சேதிசு அரசர் திருட்டகேதுவின் படைகள் - 1 அக்குரோணி

சராசந்தனின் மகன் சயத்சேனனின் படைகள் - 1 அக்குரோணி

துருபதனின் படைகள் - 1 அக்குரோணி

மத்சய அரசன் விராடனின் படைகள் - 1 அக்குரோணி

தமிழ் நாட்டு அரசர்களின் படைகள் (சோழரும் ,பாண்டியரும்) - 1 அக்குரோணி.

பாண்டவர்களின் படைகளுக்கு தலைமைப்படைத் தலைவராக திருட்டத்துயும்னன் நியமிக்கப்பட்டார்.

பாண்டவப் படைகளுக்கு போர்த்தந்திரங்கள் சொல்லித் தர ஸ்ரீ கிருஷ்ணர் இருந்தார்.
ஆனால் கிருஷ்ணர் இப்போரில் ஆயுதம் ஏந்தி போர் செய்யாமல் அருச்சுனனின் தேரோட்டியாக செயல்பட்டார்

போரில் வெற்றி பெற அரவானை பலி கொடுத்தனர். போர் துவங்குவதற்கு முன், ஒரு அணியிலிருந்து வேறு அணிக்கு மாற விரும்புபவர் மாறலாம் என தருமர் கூற, திருதராட்டினரின் இரண்டாம் மனைவியின் மகன் யுயுத்சு கௌரவர் அணியிலிருந்து, பாண்டவர் அணிக்கு மாறி அவர்கள் சார்பாக போரிட்டான்.

தற்போதைய கணக்குப்படி பாண்டவர்கள் படையில் 7 அக்குரோணி (15,30,900 படைகளும்) கௌரவர் படையில்11 அக்குரோணி (24,05,700 படைகளும்) இருந்தன.



போரில் நடுநிலை வகித்தவர்கள்

ஸ்ரீ கிருஷ்ணரின் அண்ணன் பலராமன், கௌரவ மற்றும் பாண்டவர்களின் சித்தப்பா விதுரன், மற்றும் விதர்ப்ப நாட்டு மன்னர் உருக்மி.


போர் முடிவில்....

கௌரவர் தரப்பில் கிருபர், அசுவத்தாமன், கிருதவர்மன், அங்க தேசத்து அரசன் கர்ணனின் மகன் விருச்சகேது ஆகிய நால்வர் மட்டுமே போரின் இறுதியில் உயிருடன் எஞ்சினர்.

பாண்டவர் தரப்பில் ஐந்து பாண்டவர்கள், ஸ்ரீ கிருஷ்ணர், சாத்தியகி மற்றும் யுயுத்சு ஆகிய எட்டு பேர்கள் மட்டும் உயிருடன் எஞ்சினர்.

போரில் ஈடுபட்ட மற்ற அனைத்து மன்னர்கள், படைத்தலைவர்கள் மற்றும் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.




1 comment:

Powered by Blogger.