Bheeshmar


கங்கை மைந்தர் பீஷ்மர் 




மகாபாரதம் என்ற காவியத்தைப் பற்றி நாம் பேச ஆரம்பித்தவுடன் நம் நினைவுக்கு வரும் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்ரீகிருஷ்ணர், கர்ணன், அர்ஜீணன் ஆகியோருக்கு பின் நம்மை ஆட்கொள்வது கங்கை மைந்தர் தேவவிரதன் என்கிற பீஷ்மர்.

இனி அவரைப் பற்றி காண்போம்...

முன்னொரு காலத்தில் இந்திரலோகத்தின் காவல் தெய்வங்களாக அஷ்ட வசுக்கள் எனப்படும் எட்டு தேவர்கள் இருந்தனர்.பூமியில் உள்ள இயற்கையின் அம்சமாக இந்த எட்டு தெய்வங்களும் விளங்கினர்.அதில் மூத்தவரும் காற்றின் அம்சமாகவும் இருப்பவர் பிரபாசன் ஆவார்.ஒருமுறை அஷ்ட வசுக்கள் அனைவரும் பூமிக்கு வந்தனர்,அவர்கள் கண்ணில் ஒரு அழகிய வனம் தென்பட்டது, அந்த வனத்தில் மரம், செடிகள்,புற்கள் என அனைத்தும் பச்சை பசேல் என காட்சி தந்தது, அங்கிருந்த பறவைகள் அனைத்தும் கூடுகட்டி சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த ஒரு அன்னப்பறவையிடம் பிரபாசனின் மனைவி அந்த வனம் அழகாய் இருப்பதன் காரணம் காமதேனு என்னும் பசு என்று தெரிந்து கொள்கிறாள்.காமதேனு பசு எது கேட்டாலும் கொடுக்கும் வல்லமை கொண்டது, அது எங்கு இருந்தாலும் செல்வம் கொழிக்கும் என்பதையும் அறிந்த பிரபாசனின் மனைவி அந்தப் பசு எனக்கு வேண்டும் என்று கேட்கிறாள். உடனே தன் சகோதரர்களை அந்த காமதேனு பசு எங்கு இருந்தாலும் பிடித்து வரும்படி ஆணையிடுகிறார் பிரபாசன். காமதேனு பசுவை தேடி அலையும் அவர்கள் பிரம்மாவின் அம்சமான முனிவர் வசிஷ்டரின் குடிலில் அந்த பசு கட்டப்பட்டிருப்பதை காண்கின்றனர். உடனே இதை பிரபாசனிடம் தெரிவிக்கின்றனர், ஆனால் தன் பிரியமான மனைவியின் ஆசையை நிறைவேற்ற வேண்டுமென்பதற்காக காமதேனுவை கவர்ந்து வாருங்கள் என்று கட்டளையிடுகிறார்.

மூத்தவரின் கட்டளையை நிறைவேற்ற சகோதரர்கள் ஏழு பேரும் வசிஷ்டரின் ஆசிரமம் சென்று காமதேனுவை பிடிவாதமாய் இழுத்து வருகிறார்கள். கடும் சினம் கொண்ட வசிஷ்ட முனிவர் அஷ்ட வசுக்களாகிய நீங்கள் எட்டு பேரும் மானுட பிறவி காண்பீர்களாக என்று சாபம் இடுகிறார். அதுமட்டுமின்றி விருப்பமில்லாமல் காமதேனுவை துன்புருத்தியதால் எட்டு பேருக்கும் தோஷம் பிடிக்கிறது.தேவரின் அதிபதி இந்திரன் அவர்களை தேவலோகத்தை விட்டு விலக்குகிறார்.தன் பேராசையால் வந்த விளைவைக் கண்டு மனம் திருந்தும் பிரபாசனின் மனைவி வசிஷ்டரிடம் மன்னிப்பு வேண்டுகிறாள்.மனமிறங்கும் வசிஷ்டர் அஷ்ட வசுக்கள் அனைவரும் புனித நதியான கங்கையின் வயிற்றில் மகன்களாக பிறந்து பாவத்தை போக்குவீர்களாக என்று வரமளிக்கிறார்.சகோதரர்கள் ஏழு பேரும் பிறந்த தினமே மரணம் தழுவி விண்ணுலகம் செல்வர் எனவும் தண்டனைக்குரிய பிரபாசன் மட்டும் 888 ஆண்டுகள் பூமியில் திருமண பந்தமற்று பிரம்மச்சாரியாக வாழவேண்டும் எனவும் உரைக்கிறார். இந்த தண்டனையால் கலங்கிப்போகிறார் பிரபாசன்.அவர் கலக்கத்தை போக்கும் விதத்தில் "நீ வாழும் காலத்தில் உன்னை மிஞ்சிய வீரன் இந்த பூவுலகில் இருக்கப்போவதில்லை எனவும், இந்த பூமியில் உன்னால் தர்மம் நிலை நாட்டப்படும்" என்றும் வரம் தருகிறார்.




வசிஷ்டரின் சாபத்தின்படி அஸ்தினாபுரம் என்ற மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தில் சந்திர வம்சத்தில் மகாராஜா குருவின் வழித்தோன்றலில் உதித்த மகாபீஷனின் மானிட பிறவியான மகாராஜா சந்தனுவின் மகன்களாக தேவ கங்கையின் வயிற்றில் பிறக்கிறார்கள்.சகோதரர்கள் ஏழுபேரும் பிறந்த தினமே மரணம் தழுவி தேவலோகம் செல்ல பிரபாசன் மட்டும் மானிட பிறவியில் தேவவிரதன் என்ற பெயருடன் பூமியில் வாழ்கிறான்."அவனுடைய 25தாவது வயதுவரை என் பொறுப்பில் வளர்த்து தம்மிடம் ஒப்படைப்பேன்" என்று சொல்லி அவனை அழைத்து செல்லும் கங்கை அவனை விஷ்ணுவின் அம்சமான பரசுராமரிடம் ஒப்படைக்கிறாள்.அவரிடம் பிரம்மாஸ்திரம்,தனுர்வித்தை, அஸ்த்ர சாஸ்திரம், வேதம், நான்மறைகள் என அனைத்தையும் கற்றுக்கொள்ளும் தேவவிரதன், பஞ்ச பூதங்களின் தெய்வங்களிடம் ஆசி பெற்று அவர்களின் அம்சமான சக்தி ஆயுதங்களை வரமாக பெருகிறான்.பரந்த பாரதத்தில் மிகப்பெரிய வீரனாக உருவெடுக்கிறான்.25ஆவது வயதில் அவனை சந்தனு மகாராஜாவிடம் சேர்த்துவிட்டு தன் நீரோட்டத்தை தொடர்கிறாள் அன்னை கங்கை.அஸ்தினாபுரத்தில் இளவரசு பட்டம் சூட்டப்பட்ட தேவவிரதன் தன் தந்தையைப் போலவே நாட்டு மக்களுக்கு சேவை செய்கிறான். தன் தந்தை மீனவப்பெண் சத்தியவதியின் மேல் காதல் கொண்டதை அறிந்து தன் தந்தைக்காக பெண்கேட்டு செல்கிறான். ஆனால் சத்தியவதியோ "அரியணையை அலங்கரிக்க நீ இருக்கும்போது என் வாரிசுகள் உனக்கு அடிமையாக இருக்க வேண்டுமா, என்னால் உன் தந்தையை மணக்க இயலாது, என் வாரிசுகள் அஸ்தினாபுரத்தை ஆளும் உரிமையை நீ விட்டு தந்தால் உன் தந்தையை மணக்க நான் சம்மதிக்கிறேன்" என்று சொல்கிறாள்.அதற்கு ஒப்புக்கொள்கிறான் தேவவிரதன். ஆனால் சத்தியவதியோ "இன்று உன்னால் வாக்களிக்க இயலும் ஆனால் நாளை உனக்கு திருமணம் ஆனால் உன் மனைவிக்கு என்ன பதில் சொல்வாய், உன் வாரிசுகளுக்கு என்ன பதில் சொல்வாய்" என்று கேட்க, புனித கங்கை நதியின் கரையில் நின்று தன் உதிரத்தால் "என்றும் அஸ்தினாபுரத்தின் அரியணைக்கு காவலாளியாக மட்டுமே நிற்பேன், அதுமட்டுமின்றி என் வாழ்நாளில் எந்த பெண்ணையும் மணக்க மாட்டேன்" என்று தன் பீஷ்மத்தை(ஆண்குறியை) அறுத்து எறிகிறார்.இதைக் கண்டு மூவுலகும் பதைக்கிறது. தன் மகனின் இந்த செயலைக் கண்ட சந்தனு மகாராஜா "உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்" என்று வினவ "உம்முடைய காலத்திற்குப் பிறகு உம்மைப்போல் நீதிநெறி தவறாமல் தர்மத்தின் வழியில் நடக்கும் ஒருவன் அஸ்தினாபுரத்தின் அரசனாக வரும்வரை எனக்கு மரணம் வரக்கூடாது" என்று வரம் கேட்கிறான் தேவவிரதன். "அப்படியே ஆகட்டும் மகனே, நீ விரும்பாமல் உன் மரணம் உன்னை நெருங்காது, இந்த உலகில் படைக்கப்பட்ட எந்த ஒரு பொருளாலும் உன் அனுமதியின்றி உன்னிடம் வர இயலாது, உன்னைக் கொல்ல நினைத்தால் பிரம்மாஸ்திரம் கூட தோற்றுப்போகும், பீஷ்மத்தை துறந்ததால் உன்னை இந்த உலகம் இனி பீஷ்மன் என்று அன்போடு அழைக்கும்" என்று வரம் தருகிறார்.இதுவே தேவவிரதன் பீஷ்மராக மாறியதன் பின்னணியாகும்.மூன்று உலகங்களிலும் கங்கை மைந்தர் பீஷ்மரை மிஞ்ச எவரும் இல்லை என்ற நிலை உருவெடுக்கிறது.தர்மத்தின் மறு உருவமாக மாறுகிறார் பீஷ்மர். 




பீஷ்மரின் வீரத்தால் அண்டை நாடுகள் அனைத்தும் அஸ்தினாபுரத்திற்கு அடிமை நாடுகளாயின.தன் தந்தைக்கும் மீனவப்பெண் சத்தியவதிக்கும் திருமணம் செய்து வைக்கிறார் பீஷ்மர்.அவர்களுக்கு சித்ராங்கதன், விசித்திரவீரியன் என்று இரு மகன்கள் பிறக்கின்றனர்.தன் தந்தையின் மரணித்திற்கு பின் சித்ராங்கதன் அரியணை ஏறுகிறான்.அண்ணன் காட்டிய வழியில் ஆட்சி நடத்திய சித்ராங்கதன் கந்தர்வன் ஒருவனோடு போர் புரிந்து வீர மரணம் அடைகிறான்.அவனுக்கு பின் விசித்திரவீரியன் அரியணை ஏறுகிறான்.அவனால் மக்களுக்கு தினம் தினம் தொல்லைகள் வருகிறது.அவனைத் திருத்த முடியாமல் தவிக்கிறார் பீஷ்மர்.ஒருநாள் காசி ராஜ்ஜியத்தின் அரசன் தன் மகள்கள் மூன்று பேருக்கும் அஸ்தினாபுரத்திற்கு அழைப்பு விடுக்காமல் சுயம்வரம் ஏற்பாடு செய்கிறான்.இதை அறிந்த சத்யவதி தன் மகன் சார்பாகவும் அஸ்தினாபுரத்தின் சார்பாகவும் பீஷ்மரை அனுப்புகிறாள்.காசி அரசனின் மூத்த மகள் அம்பை பக்கத்து நாட்டு அரசன் சால்வனை காதலிக்கிறாள்.உன்னை சுயம்வரத்தில் வென்று முடி சூடுவேன் என்று சொல்லி சுயம்வரத்திற்கு வருகிறான் சால்வன். ஆனால் திடீரென்று வருகை தரும் பீஷ்மர் அனைவரையும் வென்று மூன்று கன்னிகளையும் தூக்கி செல்ல முயலுகிறார், தடுக்கும் சால்வனை துரத்தி அடித்துவிட்டு இளவரசிகளுடன் அஸ்தினாபுரம் வருகிறார்.அம்பையின் காதலை தெரிந்துகொண்டு அவளை சால்வனிடமே திருப்பி அனுப்புகிறார்.ஆனால் சால்வனோ இன்னொருவன் இட்ட பிச்சை எனக்கு வேண்டாம் என்று அவளை ஏற்க மறுக்கிறான்.தன்னை மணக்க சொல்லி பீஷ்மரை கெஞ்சுகிறாள் அம்பை ஆனால் தன் தந்தைக்கு செய்துகொடுத்த சத்தியத்தின் பேரில் அவளை ஏற்க மறுக்கிறார் பீஷ்மர்.மனமுடைந்து போகும் அம்பை பீஷ்மரை கொல்ல வேண்டுமென சபதமெடுக்கிறாள்.மகாவிஷ்ணுவின் அவதாரமும் பீஷ்மரின் குருவான பரசுராமரிடம் உதவி வேண்டுகிறாள் அம்பை.அவளுக்காக பேசிய பரசுராமரின் வார்த்தைகளை உதாசீனப் படுத்துகிறார் பீஷ்மர்.போரில் என்னை வெல்வாயாக இல்லையென்றால் அம்பையை மணப்பாயாக என்று கர்ஜிக்கிறார் பரசுராமர்.இருவரும் யுத்தம் செய்ய முடிவெடுத்து போர்களம் செல்கின்றனர்.தன் குருவை எதிர்த்து போர் புரிகிறார் பீஷ்மர்.இருவருக்கும் இடையே நடக்கும் தர்ம யுத்தம் பல நாட்கள் தொடர்கிறது.போரை முடிக்கும் விதமாக நித்ரா அஸ்திரம் எய்யும் பீஷ்மர் பரசுராமரை உறக்கத்தில் ஆழ்த்துகிறார்.போர்களத்தில் தூங்கியவன் தோற்றவன் எனப்படுவான்.தூக்கத்தில் இருந்து எழும் பரசுராமர் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு திரும்பிச் செல்கிறார்.தன் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்திற்காக தன் குருவை வென்று காட்டியவர் பீஷ்மர்.

அவரை வெல்ல முடியாத வேதனையில் அம்பை இமயமலை அடிவாரம் செல்கிறாள் அங்கு ஈசனை நோக்கி கடும் தவம் செய்கிறாள்.அவள் தவம் கண்டு மனமிரங்கும் ஈசன் அவள் முன் தோன்றுகிறார்.இப்பிறவியில் பீஷ்மனை கொல்ல முடியாது நீ மறுபிறவி காண வேண்டும் என்று சொல்கிறார்.பீஷ்மரை கொல்ல முடியாதெனில் இந்த உயிர் இருந்து என்ன பயன் என்று முடிவெடுத்து தீயிட்டு தன் அழகிய தேகத்தை அக்னி தேவன் உண்ண அணுமதிக்கிறாள் அம்பை.சிகண்டிணி என்ற பெயர் கொண்டு பாஞ்சாலத்தின் அரசன் துருபதனின் மகளாக மீண்டும் ஜனனமெடுக்கிறாள்.




தன் தம்பி விசித்திரவீரியனுக்கு அம்பையின் தங்கைகள் அம்பிகா அம்பாலிகா இருவரையும் மணமுடிக்கிறார்.விசித்திரவீரியன் அகால மரணம் அடைய, வாரிசு இல்லாத ராஜ்ஜியம் தலைக்க வேத வியாசர் சகோதரிகள் இருவருக்கும் குழந்தை பாக்கியம் தருகிறார்.திருதிராஷ்ட்ரனும் பாண்டுவும் பிறக்கிறார்கள்.அவர்களை நல்ல முறையில் வளர்க்கும் பீஷ்மர், கண் தெரியாத திருதிராஷ்ட்ரன் அரசாள முடியாது எனவும் பாண்டுவுக்கே அரியணை என்று கூறுகிறார்.விதியின் சதியால் காட்டிற்கு செல்லும் பாண்டு அங்கேயே மரணிக்க அரியணை திருதிராஷ்ட்ரனுக்கு வருகிறது. திருதிராஷ்ட்ரனின் மனைவி காந்திரியின் அண்ணன் சகுனியின் சூழ்ச்சியால் துரியோதணன் அரியணை மோகம் கொண்டவனாக இருப்பதை கண்டு மனவேதனை அடைகிறார்.பாண்டவர்களை அஸ்தினாபுரம் அழைத்து வந்து குரு துரோணரிடம் கல்வி பயில செய்கிறார் பீஷ்மர்.பாண்டவர்கள் மீது அதிக பாசம் வைத்து துரியோதணனையும் அவன் சகோதரர்களையும் கோபத்திற்கு ஆளாக்குகிறார்.பாண்டவர்களை புகழ்ந்தும் கொளரவர்களை இகழ்ந்தும் ஒரு மாபெரும் யுத்ததிற்கு அடிகோலுகிறார்.எந்த பாண்டவர்களை புகழ்கிறீர்களோ அவர்கள் கைகளாலேயே நீங்கள் மடிவீர்கள் என்று துரியோதணன் கூறுகிறான்.வாரணாவதத்தில் மாளிகை தீயில் எரிந்த பிறகும் பாண்டவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்று நம்புகிறார்.அவர் நம்பிக்கை பொய்யாகாமல் பாண்டவர்கள் நாடு திரும்ப யுதிஷ்டிரனுக்கு இளவரசு பட்டம் கட்ட ஆயத்தம் செய்கிறார்.பாண்டவர்களுக்கும் கொளரவர்களுக்கும் இடையே நடக்கும் மோதலுக்கு முடிவு கட்ட ராஜ்ஜியத்தை இரண்டாக பிரித்து கொடுக்கிறார்.ஆனால் சூதாட்டம் நடந்து பாண்டவர்கள் தோற்று துரியோதணன் ராஜ்ஜியத்தை பெறுகிறான்.அவனுடைய செயல்களுக்கு தடை போட முடியாமல் தவிக்கும் அவர் துரியோதணனுக்கு சாபம் இடுகிறார்.அதுமட்டுமின்றி கொளரவ சபையில் இருக்கும் அனைவருக்கும் காலன் நெறுங்கிவிட்டான் என்று உறைக்கிறார்.கர்ணனின் நாட்பாலும் அவனுடைய வீரத்தின் மீதான நம்பிக்கையாலும் துரியோதணன் தவறு செய்கிறான் என்பதை உணரும் அவர் கர்ணனை எப்போதும் விலக்கியே வைக்கிறார் அதுவே இருவருக்கும் ஒரு மறைமுக எதிர்ப்பை உண்டாக்குகிறது.மகாபாரத போர் துவங்கும் நேரத்தில் கொளரவ தளபதியாக நியமிக்கப்படுகிறார் பீஷ்மர்.கர்ணனை தென் திசையின் காலாட் படைக்கு தலைவனாக நியமிக்க, ஆத்திரம் கொள்ளும் கர்ணன் பீஷ்மர் சாய்ந்த பிறகே போர்க்களம் வருவேன் என சத்தியம் செய்கிறான்.

தாத்தா நான் உங்களை நம்பியே போர்க்களம் வருகிறேன் என சொல்லும் துரியோதணனிடம் என் உயிர் போகும்வரை உன் உயிர் காக்கப்படும் என்று சத்தியம் செய்கிறார்.பரசுராமரையே வென்ற பீஷ்மரை வெல்ல சதி செய்யும் பாண்டவர்கள் தங்கள் தளபதியாக அம்பையின் மறுபிறவியான, பெண்ணாக இருந்து ஆணாக மாறிய சிகண்டியை நியமிக்கின்றனர்.தன் மரணம் தன்னை நெறுங்கிவிட்டதை உணருகிறார் பீஷ்மர்.




துரியோதணனின் வார்த்தையை கேட்ட பீஷ்மர், "என் உடல் மண்ணில் சாயாமல் உன்னை ஒருவரும் வீழ்த்த அனுமதியேன்" என்று சத்தியம் செய்கிறார். ஆனால் போரில் பாண்டவர்களில் யாரையும் கொல்ல மாட்டேன் என்றும் அவனிடம் உறுதியளிக்கிறார்.பாரதப் போரில் கொளரவ சேனையின் தளபதியாக வீறுநடை போட்டு வருகிறார். போரில் கிருஷ்ணரை எதிர்த்து போரிடுவதே அவர் லட்சியமாக இருந்தது, ஆனால் கிருஷ்ணர் போர் செய்ய மாட்டேன் என்று சொன்னதும், "பரம்பொருளே, போரில் உன்னை ஆயுதம் ஏந்த வைப்பேன்" என்று சவால் விடுகிறார்.

போரின் முதல் நாளில் மாகாரதிகளுக்கும், சமரதிகளுக்கும், காலாட்படைக்கும், குதிரை படைக்கும், யானை படைக்கும் அவர்களுது இடத்தை நிர்ணயம் செய்கிறார்.துரியோதணனின் நண்பன் கர்ணன் பீஷ்மரோடு ஏற்பட்ட மனக் கசப்பால் போரில் பீஷ்மர் தலை சாயாமல் போர்க்களம் புகமாட்டேன் என்று விலகுகிறான். துரியோதணனை காக்கும் பொறுப்பை அதிமகாரதிகள் அஸ்வத்தாமனுக்கும் துரோணருக்கும் வழங்குகிறார்.முதல்நாள் போரில் பாண்டவ சேனை வகுத்த யுத்த வியூகத்தை தனி ஆளாய் நின்று தகர்த்து எறிகிறார்.முதல் நாளில் ஒரு அக்ரோணி சேனையை அழிக்கிறார். (ஒரு அக்ரோணி சேனை 1 லட்சம் போர்வீரர்கள்,65000 குதிரைகள், 21000 யானைகள், 21000 ரதிகளைக் கொண்டது).பாண்டவர்களை தடுக்க அவர் செய்யும் முயற்ச்சியானது விராட தேசத்தின் இளவரசன் உத்திரையின் அண்ணன் சுவதன் உயிரைப் பறிக்கின்றது.

இரண்டாம் நாள் போரில் பாண்டவ சேனையின் முகப்பை உடைத்து நிலைகுலையச் செய்து கொளரவ சேனையை உள்ளே அனுப்பி பெரும் நாசம் செய்கிறார்.பாண்டவர்கள் பக்கம் எவர் இருந்தும் பீஷ்மரின் ஆற்றல் முன் அனைவரும் குழந்தை போல் ஆகிறார்கள்.தொடர்ந்து ஆறு நாட்கள் பாண்டவ சேனையை நிர்மூலமாக்குகிறார் பீஷ்மர்.ஏழாம் நாள் போரில் அர்ஜீணன் மகன் அபிமன்யு அவரை திறன் கொண்டு எதிர்க்கிறான்.பீஷ்மரின் ஆற்றலுக்கு சற்றும் சளைக்காமல் அம்புக்கணை தொடுக்கிறான்.ஆனாலும் அவனை போரில் வென்று அவனை மேலும் காயப்படுத்தாமல் வாழ்த்தி அனுப்புகிறார் பீஷ்மர்.எட்டாம் நாள் போரில் அர்ஜீணனை தேரோடு சேர்த்து கட்டி, துருபதனோடு மல்யுத்தம் புரிகிறார், அதே நேரத்தில் பீமன் கொளரவ சேனைக்குள் நுழைந்து கொளரவர்கள் 8 பேரை கொல்கிறான்.எட்டாம் நாள் போரின் முடிவில் துரியோதணன் பீஷ்மரை கடிந்து கொள்கிறான்.ஒன்பதாம் நாள் தர்மனை உயிரோடு சிறைபிடிக்க பீஷ்மருக்கு உத்தரவிடுகிறான் துரியோதணன், தர்மனை சிறைபிடிக்கும் முயற்ச்சியில் இருக்கும் பீஷ்மர் தன் சேனையை விட்டு விலக, மீண்டும் பீமன் கொளரவ சேனைக்குள் நுழைந்து 17 கொளரவ சகோதரர்களை வீழ்த்துகிறான்.அவர்களுள் முக்கியமானவன் விகர்ணன்.தர்மனை பீஷ்மர் நெருங்க முடியாமல் சுழலும் திரிசங்கு வியூகம் அமைத்து தர்மனை காப்பாற்றுகிறான் துருபதன்.

25 சகோதரர்களை பறிகொடுத்த துரியோதணன் பீஷ்மரை வசை பாடுகிறான்.உண்மையில் பீஷ்மர் யாருக்காக போர் செய்கிறார் என்று எள்ளி நகைக்கிறான்.இதனால் கடும் சினம் கொண்ட பீஷ்மர் தன் தவ வாழ்வை மனிதர்கள்,கந்தர்வர்கள்,தேவர்கள்,பூதங்கள்,அரக்கர்கள்,கிங்கிரர்கள் சாட்சியாக அக்னிக்கு தானம் செய்கிறார். அதிலிருந்து 5 தங்க அம்புகள் தோன்றுகிறது.நாளை இந்த அம்புகள் கொண்டே பாண்டவர்கள் உயிர் பறிப்பேன் என்று துரியோதணனுக்கு சத்தியம் செய்கிறார்.




பாண்டவர்களை அழிக்கும் ஆயுதங்களை கண்டவுடன் துரியோதணன் மகிழ்கிறான்.அந்த தங்க அம்புகளை பீஷ்மரிடம் இருந்து வாங்கி கொள்கிறான். நாளை போர்களத்தில் அவற்றை ஒப்படைப்பதாக எடுத்து செல்கிறான். ஆனால் அவன் குடிலுக்குள் காத்திருக்கும் ஶ்ரீகிருஷ்ணரால் அனுப்பப்படும் அர்ஜீணன் அந்த அம்பு வேண்டும் என்று கேட்க அவற்றை கொடுக்கிறான்.(நெடுநாட்களுக்கு முன்பு அர்ஜீணன் செய்த உதவிக்காக "நீ யாசகமாக எதை கேட்டாலும் தருவேன்" என்று துரியோதணன் வரமளித்திருந்தான்).பத்தாம் நாள் காலை பீஷ்மர் அந்த அம்புகளை கேட்க நடந்ததை கூறி வருத்தப்படுகிறான் துரியோதணன்.விதியின் சக்தியை அவனுக்கு எடுத்துக்கூறி தன் அன்னை புனித கங்கையில் நீராடச் செல்கிறார்.அங்கு ஒரு பெண் அவரிடம் யாசகம் பெற வருகிறாள்.தீர்க்க சுமங்கலி வரத்தை அவரிடம் கேட்கிறாள், அவரும் அவளுக்கு ஆசி வழங்குகிறார்.அவள் வெறு யாரும் அல்ல துருபதன் மகள் திரவுபதிதான்.அதை பீஷ்மரும் அறிவார்.

பத்தாம் நாள் போர் துவங்க, அர்ஜீணன் அவருக்கு சவால் விடுகிறான்.அர்ஜீணனின் வில்லில் உள்ள நாணை அறுத்து எறிகிறார். தனுசை கையில் ஏந்தி அர்ஜீணன் போரை மீண்டும் துவங்க, பீஷ்மரின் சக்திக்கு முன்னால் அவன் செலுத்தும் எந்த அஸ்திரமும் பலமற்று பலமுறை அஸ்திரம் இழந்து அவரிடம் தோற்கிறான்.அர்ஜீணனின் இந்த நிலைகண்டு ஶ்ரீகிருஷ்ணர் தன் சபதத்தை மறந்து கையில் சுதர்சணம் ஏந்தி பீஷ்மருக்கு சவால் விடுகிறார்.அதையும் திறன்கொண்டு எதிர்க்க துணிகிறார் பீஷ்மர்.ஶ்ரீகிருஷ்ணரை தடுக்கும் அர்ஜீணன் பீஷ்மரை வீழ்த்துவதாக உறுதி அளிக்கிறான்.அதுவரை போர்களத்தில் மறைந்து இருந்த சிகண்டியை அழைத்து வருகிறார் ஶ்ரீகிருஷ்ணர்.

முருகப் பெருமான் கொடுத்த வாடாமல்லி மாலையை கழுத்தில் ஏந்தி அர்ஜீணன் தேரில் ஏறுகிறான்(ள்) சிகண்டி.அதுவரை மனம் தளராமல் போரிட்டு வந்த கங்கையின் புதல்வன் மனம் தடுமாறுகிறது.முருகப் பெருமானின் வாடாமல்லி மாலையை கண்டதும் மரணத்தை ஏற்க துணிகிறார்,சிகண்டி வில்லை ஏந்தும் நொடி தன் கையில் இருக்கும் வில்லை நழுவ விடுகிறார்.சிகண்டியின் அம்பு அவர் மார்பில் பாய, அர்ஜீணன் செலுத்திய அம்புகள் அவர் சரீரம் எங்கும் பாய்கிறது.போர்க்களத்தில் வேறோடு சாய்கிறார் பீஷ்மர்.உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட, அனைவரும் அங்கு கூடுகின்றனர்.பீஷ்மர் வீழ்ந்து கிடக்கும் இடம் போர்களத்தில் இருந்து ஒதுக்கப்படுகிறது.தன் கடைசி ஆசையாக கங்கை நீரை குடிக்க ஆசை படுகிறார் பீஷ்மர்.அர்ஜீணன் செழுத்தும் சக்தி வாய்ந்த அம்பு நிலத்தை குடைந்து சென்று கங்கையை குருஷேத்திரம் கொண்டு வருகிறது.ஆசை தீர கங்கை நீரை பருகும் பீஷ்மர் அனைவரையும் அங்கிருந்து செல்ல கட்டளை இடுகிறார்.உத்ராயண காலத்தில் உயிர் விட்டு சொர்க்கம் செல்ல ஆசைகொண்டு உத்ராயண கால்த்திற்காக காத்திருக்கிறார்.

போரில் பாண்டவர்கள் வென்று தர்மன் அவரிடம் ஆசி வாங்க செல்கிறான்.அவனுக்கு ஆசி வழங்கி ஒரு மனிதனின் கடமைகளை எடுத்து சொல்கிறார்.ஒருவன் அரசனாக, மகனாக,தந்தையாக,நண்பனாக, அண்ணனாக,பகைவனாக,மாமனாக, மைத்துணனாக,கணவனாக செய்ய வேண்டிய செயல்கள், அவன் ஆற்ற வேண்டிய கடமைகள் மற்றும் அவன் அடுத்த தலைமுறைக்கு செய்ய வைக்க வேண்டிய கடமைகள் என அனைத்தையும் எடுத்து சொல்கிறார் (இதுவே பின்னாளில் பீஷ்மப் பருவம் என்று உலகத்தாரால் எடுத்து சொல்லப்படுகிறது, ஶ்ரீகிருஷ்ணரின் கீதா உபதேசத்திற்கு சம்மாக சான்றோர்களால் பீஷ்மப் பருவம் கருதப்படுகிறது).

பதினெட்டு நாள் போர் முடிந்து, தர்மன் அஸ்தினாபுரத்தின் அறியணையில் முடிசூடும் நாள் உத்ராயண காலம் துவங்க தன் இன்னுயிரை நீத்து சொர்க்கம் சென்று மீண்டும் தன் சகோதரர்களாண அஷ்ட வசுக்களோடு இணைகிறார்.

2 comments:

Powered by Blogger.